Saturday, January 15, 2011

அடைக்காத் தாழ்

[முந்தைய பதிவான “தொலைந்(த்)த அர்த்தங்கள்” படித்து விட்டு இந்த பதிவினை படிக்கவும்]

அர்த்தங்களைத் தொலைத்த
வார்த்தைகள்
ஆதரவற்று
அனாதைகளாயின

பதியிழந்த பெண்ணைப் போல
கதியிழந்த வார்த்தைகள்
கிறுக்கல்களாய்
நடுத்தெருவில் நின்றன
அலங்கோலமாய்

மணத்தினைத் தொலைத்த
மலர்களைப் போல
அலைகளைத் தொலைத்த
கடலைப் போல
அசைவினைத் தொலைத்த
காற்றினைப் போல
வண்ணங்களைத் தொலைத்த
வானவில்லைப் போல
வெளிச்சத்தினைத் தொலைத்த
விளக்கினைப் போல
சிறகுகளைத் தொலைத்த
வண்ணத்துப்பூச்சியைப் போல
சித்தத்தினைத் தொலைத்த
மனிதனைப் போல
சீவனைத் தொலைத்த
மெய்யைப் போல
உண்மையைத் தொலைத்த
உணர்வுகளைப் போல
பச்சையைத் தொலைத்த
மரங்களைப் போல
புன்னகையைத் தொலைத்த
முகங்களைப் போல
சத்தங்களைத் தொலைத்த
சலங்கைகளைப் போல
சுத்தத்தினைத் தொலைத்த
தண்ணீரைப் போல
தீர்ப்பினைத் தொலைத்த
வழக்கினைப் போல
சுதந்திரத்தைத் தொலைத்த
பறவைகளைப் போல
நாட்டினைத் தொலைத்த
அகதிகளைப் போல


வருத்தமுற்ற
வேதனையுற்ற
விரக்தியுற்ற
கிறுக்கல்கள்
அர்த்தங்களைத் தேடியடைய
பயணமேற்கொண்டன

மலைகளெல்லாம் ஏறின
பயனேதும் இல்லை
நதிகளோடு வளைந்து விழுந்து
வழியெலாம் தேடின
பயனேதும் இல்லை
திசை காட்டும் பறவைகளிடம் கேட்டன
பயனேதும் இல்லை
பாலையவனத்தில் தேடின
பாற்கடலில் கடைந்தன
காற்றிடம் வினவின
கடலாழத்தில் கூடாரமிட்டன
வானத்தில்
வைகுண்டத்தில்
கானகங்களில்
கல்லறைகளில்
இன்னும் எங்கெலாம் இயலுமோ
அங்கெலாம் தேடின
பயனேதும் இல்லை

ஊரெலாம்
உலகெலாம்
தேடித் தேடி
அலைந்ததால்
களைப்புற்ற கிறுக்கல்கள்
நிழல் தேடி
அடைக்கலமாயின

களைப்புமிகுதியால்
சற்றே கண்ணயர்ந்தன
எவ்வளவு காலம்
தூங்கினவெனத் தெரியவில்லை
ஆனால்
துயிலெழுந்த பொழுது
அவை
வார்த்தைகளாய் மாறியிருந்தன

ஆச்சர்யம் தாங்காமல்
எங்ஙனம் நிகழ்ந்தது இவ்வதிசயமென
போவோர் வருவோரிடமெலாம் வினவின
அவ்வழியே
அடிக்கடி பயணிக்கும்
வழிப்போக்கன் மூலம் அறிந்தன
அவை
அடைக்கலம் புகுந்தது
அன்பின் நிழலில் என்று

5 comments:

Rainbows ahead said...

Wow venkat!!

jeevabala said...

thanks, Mangai!

Ashokkumar said...

oru valiya padichu muduchuttaen !! idhellam padikkumbodhu dharuman ayya kitta Tamil la fail ayitu adi vangi kattikura mariye oru flashback ... Well written da !!

Chandrasekar said...

கற்பனை திறண்ட வர்ணனை, மிகுந்த அழமான கருத்து, நல்ல பதிவு :)

Tamizhan said...

தெளிவான, ஆழமான உங்களின் சிந்தனை வீரியம் கொண்ட எழுத்துக்களாய் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன

Post a Comment