Saturday, January 15, 2011

தொலைந்(த்)த அர்த்தங்கள்

முன்னொரு காலத்தில்
மொழிகள் தோன்றியிராத ஞாலத்தில்
ஆதி மனிதன்
வேட்டையாடவும், உண்ணவும், உயிர் தழைக்கவும்
நாளின் சொற்ப பொழுதே செலவானதில்
மீதியை எங்ஙனம் போக்குவதெனத் திகைத்தனன்
கையில் அகப்பட்ட
கல்லோ, கோலோ, கூரிய பொருளோ கொண்டு
குகைச் சுவர்களிலும்
மரப் பட்டைகளிலும்
மண்ணிலும் மனதிலும் கிறுக்கினன்

பல்லாயிர நூற்றாண்டுகளாய்
அங்ஙனமே மாற்றம் இல்லாமலிருந்த
கிறுக்கல்களுக்கு
சலிப்பு உண்டாயின
அர்த்தம் இல்லாமல் இருக்கின்றோமே
அவைதம் வாழ்வின் பயன் தான் என்ன என
இறைவனிடம்
இயற்கையிடம் முறையிட்டன

மனமிரங்கிய
இறைவனோ இயற்கையோ
அர்த்தமில்லாமல் இருப்பதாகத்தானே வருந்தினீர்கள்
வைத்துக் கொள்ளுங்கள் அர்த்தத்தையென
வரமளித்தது - கிறுக்கல்களின் வாழ்விற்கு
உரமளித்தது

அர்த்தங்களை அடைந்ததும் அரவணைத்ததும்
கிறுக்கல்கள்
எழுத்துகளாய்
பரிணாமம் அடைந்தன
அர்த்தங்கள் புரிந்துக்கொள்ளப்பட்டபோது
வார்த்தைகளாய்
வாக்கியங்களாய்
பதவியுயர்வும் அடைந்தன

அர்த்தங்களோடு
உணர்வுகளும் கைக் கோர்க்க
வார்த்தைகள்
கதைகளாய்
கவிதைகளாய்
கானங்களாய்
கட்டுரைகளாய்
காப்பியங்களாய்
கருத்துகளாய்
சித்தாந்தங்களாய்
விவாதங்களாய்
வாதங்களாய்
வாய்ச்சண்டைகளாய்
கைக்கலப்புகளாய்
மோதல்களாய்
யுத்தங்களாய்
இரத்தங்களாய்
மரணங்களாய்
அற்பங்களாய் மாறி
அலங்காரமிழந்து
அலங்கோலங்களாயின

இம்மாற்றங்களை
சற்றும் விரும்பாத
இம்மாற்றங்கள்
விளைவித்த சேதாரங்களால்
கலவரம் அடைந்த
அர்த்தங்கள்
கணப்பொழுதும் யோசியாமல்
வார்த்தைகளை விட்டு விலகின

வார்த்தைகள்
மீண்டும் கிறுக்கல்களாயின
வாழ்வே சறுக்கல்களாயின

[இதன் தொடர்ச்சியான “அடைக்காத் தாழ்” என்ற பதிவினையும் படிக்கவும்.]

No comments:

Post a Comment