Saturday, November 27, 2010

அகம் 401

இன்றைய தமிழ்த் திரைப்பாடல்களில் அர்த்தமே இருப்பதில்லை என்று அங்கலாய்ப்பவர்களின் ஆதங்கங்களைப் புரிந்துக்கொண்டு
மாபெரும் ஆராய்ச்சிக்கு பிறகு சங்க இலக்கியப் பாடல்களுக்கு நிகராக அகம் மற்றும் புறப்பொருள் பற்றிய செய்திகளை நமது
திரையிசைப் பாடல்களும் ஆவணப்படுத்துகின்றன என எடுத்துக்காட்டவே இந்த ஆராய்ச்சிப் பதிவு. இத்தகைய முயற்சி நம்
சூழலில் மிகவும் புதியதும் வித்தியாசமானதும் கூட. இந்த முயற்சி இது போன்ற மேலும் பல எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு
வித்திட்டால் அதுவே இப்பதிவின் வெற்றியும் நோக்கமும் ஆகும். முயற்சியாளர்களுக்கு வாழ்த்துகளுடன் பதிவிற்குள் -
ஆராய்ச்சிக்குள் - செல்வோம்.


அகம் 401
திணை : பாலைத்திணை
துறை : கடமையா காதலா என்ற தன் இருதலைகொள்ளி நிலையை, தன் பிரிவாற்றாமையை தலைமகன் தலைமகளுக்கு சொல்லியது

துறை விளக்கம் :

கடமையா காதலா எதைத் தேர்ந்தெடுப்பது என்ற தர்மசங்கடமான சூழ்நிலையில் தலைவன் தனக்கு ஏற்படும் உளப்போராட்டங்களை
தலைமகளிடம் எப்படி நாசூக்காகப் பாடல் பாடித் தெரிவிப்பது

தெளிவுரை:

தலைமகன் தன்னுடைய நீண்ட கால இலட்சியமான காவல் அதிகாரி ஆவதற்கான முயற்சியில் நகரத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்கிறான்.
ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. சில சமூக விரோதிகளுடனான எதிர்பாராத மோதலில் தன்னுடைய கனவு, இலட்சியம் எல்லாம் தகர்ந்து
போனதை நினைத்து மிகவும் வருத்தத்தில் இருக்கிறான். இந்த இக்கட்டான சமயத்தில் தன்னைத் தேடி வந்த தலைமகளைப் பார்த்த பொழுது தனக்கு
உண்டான எண்ணங்களை பாடலாகப் பாடுகிறான்.
கிராமத்தில் இருந்து தலைமகன் நகரம் வந்த காரணமே தன் இலட்சியமான காவல் அதிகாரி கனவை நனவாக்குவது தான். ஆனால், எதிர்பாராத
பிரச்னைகளால் தன் கனவை அடைய முடியாத சூழ்நிலையையும், தான் முன்மாதிரியாகக் கொண்ட தன் ஆதர்ஷ நாயகனான காவல் உயர் அதிகாரிக்கு
ஏற்பட்ட நிலையையும் எண்ணி அந்த விரோதிகளைப் பழித்தீர்க்க காத்திருக்கிறான். ஆனால் இதை விட்டுவிட்டு காதலின் பின்னால் செல்ல
மனம் எத்தனிப்பது அவன் உச்சி மண்டையில் சுர்ரென்று உறைக்கின்றது.
தன்னைத் தேடி வந்த தலைமகளை பார்க்கின்ற பொழுது, அவளோடு தான் கழித்த சுகமான பொழுதுகள் எல்லாம் அவனுக்கு நினைவுக்கு வருகின்றன.
அவளை முதன்முதலாய் பார்த்த கணம் முதல் அவள் தன்  காதலை ஏற்றுக் கொண்டது வரை அவன் மனதில் நிழலாடியது. இதையனைத்தும்
நினைத்துப் பார்க்கையில் அவனுக்கு காதல் உணர்வுகள் தலைக்கேறி தலை கிர்ரென்று சுற்றுகின்றது.
தலைமகள் தன் அருகில் வந்தால் உடம்பிலுள்ள நாடி நரம்புகள் எல்லாம் காதல் முறுக்கேறுகிறது. அளவுக்கு அதிகமான ஹார்மோன் சுரப்பினால்
காம உணர்வுகள் எல்லை மீறி கட்டுப்பாடின்றி ஏற்படுகிறது. இதனால் உடம்பே விர்ரென்று விறைத்து நிற்கின்றது. இம்மாதிரியான சூழலில்
என்ன செய்வதென்றே தெரியாமல் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறான் தலைமகன்.
இறுதியில் காதலே வென்று கடமை, இலட்சியம் எல்லாம் டர்ரென்று கிழிந்து காற்றில் பறபறவென்று பறக்கிறதென தலைமகன் ஒப்புக்கொண்டு குத்தாட்டம் போடுகிறான்.
இவ்வாறு தலைமகனின் அகச்சிக்கல்களை அதிகப்படுத்தும் புறவயப் போராட்டங்களை எல்லாம் வெற்றி கொண்டு தலைமகளோடு குதித்து ஆடுகிறான்.

இன்றைய தமிழ்த்திரை கதாநாயகர்களின் அகச்சிக்கல்களைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும் அரிய பாடல்களுள் இதுவும் ஒன்று.

பாடல்:

என் உச்சி மண்டைல சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்ருங்குது
கிட்டே நீ வந்தாலே விர்ருங்குது
டர்ருங்குது







இது ஒரு மிக சீரியஸான பதிவு!!

5 comments:

Tamizhan said...

நல்ல கற்பனை மற்றும் நகைச்சுவை...ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!

Balamurugan,S said...

மிக சிறந்த ஆராய்ச்சி... இது போன்ற மற்ற பாடல்களின் அர்த்தங்களை ஆராய்ந்து தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிவெச்சுட்டு நீ பக்கத்துலயே ஒக்கார்ந்துக்க. வருங்கால சந்ததியினர் பார்த்து, படிச்சுத் தெரிஞ்சுக்குவாங்க! :)

Mukundha Madhavan said...

super da.. see what Dr.Annamalai (Phd nu solranga :))(lyricist of this song) has to say about his works

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/19705.html

more works of annamalai for future research .. :)
http://www.raaga.com/channels/tamil/lyricist/Annamalai.html

Karthik G said...

lol... super da

ArunPrasath Vetriselvan said...

Good attempt machi..!! All the best for ur future research work...Continue to ENLIGHTEN this world with ur research results...

Post a Comment