Saturday, January 15, 2011

அடைக்காத் தாழ்

[முந்தைய பதிவான “தொலைந்(த்)த அர்த்தங்கள்” படித்து விட்டு இந்த பதிவினை படிக்கவும்]

அர்த்தங்களைத் தொலைத்த
வார்த்தைகள்
ஆதரவற்று
அனாதைகளாயின

பதியிழந்த பெண்ணைப் போல
கதியிழந்த வார்த்தைகள்
கிறுக்கல்களாய்
நடுத்தெருவில் நின்றன
அலங்கோலமாய்

மணத்தினைத் தொலைத்த
மலர்களைப் போல
அலைகளைத் தொலைத்த
கடலைப் போல
அசைவினைத் தொலைத்த
காற்றினைப் போல
வண்ணங்களைத் தொலைத்த
வானவில்லைப் போல
வெளிச்சத்தினைத் தொலைத்த
விளக்கினைப் போல
சிறகுகளைத் தொலைத்த
வண்ணத்துப்பூச்சியைப் போல
சித்தத்தினைத் தொலைத்த
மனிதனைப் போல
சீவனைத் தொலைத்த
மெய்யைப் போல
உண்மையைத் தொலைத்த
உணர்வுகளைப் போல
பச்சையைத் தொலைத்த
மரங்களைப் போல
புன்னகையைத் தொலைத்த
முகங்களைப் போல
சத்தங்களைத் தொலைத்த
சலங்கைகளைப் போல
சுத்தத்தினைத் தொலைத்த
தண்ணீரைப் போல
தீர்ப்பினைத் தொலைத்த
வழக்கினைப் போல
சுதந்திரத்தைத் தொலைத்த
பறவைகளைப் போல
நாட்டினைத் தொலைத்த
அகதிகளைப் போல


வருத்தமுற்ற
வேதனையுற்ற
விரக்தியுற்ற
கிறுக்கல்கள்
அர்த்தங்களைத் தேடியடைய
பயணமேற்கொண்டன

மலைகளெல்லாம் ஏறின
பயனேதும் இல்லை
நதிகளோடு வளைந்து விழுந்து
வழியெலாம் தேடின
பயனேதும் இல்லை
திசை காட்டும் பறவைகளிடம் கேட்டன
பயனேதும் இல்லை
பாலையவனத்தில் தேடின
பாற்கடலில் கடைந்தன
காற்றிடம் வினவின
கடலாழத்தில் கூடாரமிட்டன
வானத்தில்
வைகுண்டத்தில்
கானகங்களில்
கல்லறைகளில்
இன்னும் எங்கெலாம் இயலுமோ
அங்கெலாம் தேடின
பயனேதும் இல்லை

ஊரெலாம்
உலகெலாம்
தேடித் தேடி
அலைந்ததால்
களைப்புற்ற கிறுக்கல்கள்
நிழல் தேடி
அடைக்கலமாயின

களைப்புமிகுதியால்
சற்றே கண்ணயர்ந்தன
எவ்வளவு காலம்
தூங்கினவெனத் தெரியவில்லை
ஆனால்
துயிலெழுந்த பொழுது
அவை
வார்த்தைகளாய் மாறியிருந்தன

ஆச்சர்யம் தாங்காமல்
எங்ஙனம் நிகழ்ந்தது இவ்வதிசயமென
போவோர் வருவோரிடமெலாம் வினவின
அவ்வழியே
அடிக்கடி பயணிக்கும்
வழிப்போக்கன் மூலம் அறிந்தன
அவை
அடைக்கலம் புகுந்தது
அன்பின் நிழலில் என்று

தொலைந்(த்)த அர்த்தங்கள்

முன்னொரு காலத்தில்
மொழிகள் தோன்றியிராத ஞாலத்தில்
ஆதி மனிதன்
வேட்டையாடவும், உண்ணவும், உயிர் தழைக்கவும்
நாளின் சொற்ப பொழுதே செலவானதில்
மீதியை எங்ஙனம் போக்குவதெனத் திகைத்தனன்
கையில் அகப்பட்ட
கல்லோ, கோலோ, கூரிய பொருளோ கொண்டு
குகைச் சுவர்களிலும்
மரப் பட்டைகளிலும்
மண்ணிலும் மனதிலும் கிறுக்கினன்

பல்லாயிர நூற்றாண்டுகளாய்
அங்ஙனமே மாற்றம் இல்லாமலிருந்த
கிறுக்கல்களுக்கு
சலிப்பு உண்டாயின
அர்த்தம் இல்லாமல் இருக்கின்றோமே
அவைதம் வாழ்வின் பயன் தான் என்ன என
இறைவனிடம்
இயற்கையிடம் முறையிட்டன

மனமிரங்கிய
இறைவனோ இயற்கையோ
அர்த்தமில்லாமல் இருப்பதாகத்தானே வருந்தினீர்கள்
வைத்துக் கொள்ளுங்கள் அர்த்தத்தையென
வரமளித்தது - கிறுக்கல்களின் வாழ்விற்கு
உரமளித்தது

அர்த்தங்களை அடைந்ததும் அரவணைத்ததும்
கிறுக்கல்கள்
எழுத்துகளாய்
பரிணாமம் அடைந்தன
அர்த்தங்கள் புரிந்துக்கொள்ளப்பட்டபோது
வார்த்தைகளாய்
வாக்கியங்களாய்
பதவியுயர்வும் அடைந்தன

அர்த்தங்களோடு
உணர்வுகளும் கைக் கோர்க்க
வார்த்தைகள்
கதைகளாய்
கவிதைகளாய்
கானங்களாய்
கட்டுரைகளாய்
காப்பியங்களாய்
கருத்துகளாய்
சித்தாந்தங்களாய்
விவாதங்களாய்
வாதங்களாய்
வாய்ச்சண்டைகளாய்
கைக்கலப்புகளாய்
மோதல்களாய்
யுத்தங்களாய்
இரத்தங்களாய்
மரணங்களாய்
அற்பங்களாய் மாறி
அலங்காரமிழந்து
அலங்கோலங்களாயின

இம்மாற்றங்களை
சற்றும் விரும்பாத
இம்மாற்றங்கள்
விளைவித்த சேதாரங்களால்
கலவரம் அடைந்த
அர்த்தங்கள்
கணப்பொழுதும் யோசியாமல்
வார்த்தைகளை விட்டு விலகின

வார்த்தைகள்
மீண்டும் கிறுக்கல்களாயின
வாழ்வே சறுக்கல்களாயின

[இதன் தொடர்ச்சியான “அடைக்காத் தாழ்” என்ற பதிவினையும் படிக்கவும்.]

Friday, January 14, 2011

சுய விளம்பரம் (அ) பொக்கிஷம் (அ) நட்புக் காலம்

இப்போ எல்லாம் பதிவுலகத்துல கடிதங்களை வெளியிடுறது ஒரு வழக்கமா ஆகிட்டிருக்கு போல. தமிழ் பதிவுலகத்தை உன்னிப்பா கவனிச்சிட்டு வர யாருக்குமே இது ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்.
சரி, நாமளும் நம்ம பங்குக்கு ஏதாவது போடுவோமேனு சொல்லி, இந்த கடிதம் உங்க பார்வைக்கு.
பாராட்டுறதுக்கு ஒரு மனசு இருக்கணும். அது இந்த என் நண்பன் கிட்ட நிறைய இருக்கு போல - என்னையும் ரொம்பவே பாராட்டியும், சில இடத்துல குட்டியும் இருக்கான். அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது.

என்ன தான் அவனோட நல்ல மனசை உங்களுக்கு காட்டத்தான்  நான் இதை பதிவேற்றம் பண்ணேனு மாரியம்மா முன்னாடி கற்பூரம் அணைச்சி சத்தியம் பண்ணாலும், இது நான் எனக்கே செஞ்சிக்கிற சுய விளம்பரங்கிறத நீங்க கண்டுபிடிக்க மாட்டீங்களா என்ன!!

மேல படிங்க....ஐ ஆம் வெரி சொரி...கீழ படிங்க..










வருத்தங்களும் வீண் கவலைகளும் மனதை அலைகழிக்கும் நாட்களில் உனது கடிதம் மென்மையான மயிலிறகால் வருடும் சுகானுபவத்தைத் தருகின்றது!!

எந்த விருதோ, வெற்றியோ, சாதனையோ பெற்றுத் தராத உன்னத அனுபவத்தை தருகின்றன உனது வார்த்தைகள்!!

கடிதத்தின் வார்த்தைகளுக்கும் உன் மனதின் எண்ண ஓட்டங்களுக்கும் எந்த முரண்பாடுகளையும் யாராலும் கண்டிட இயலாது!!

அப்படிப்பட்ட தூய்மையான, கள்ளங்கபடமற்ற மனதையே, அன்பையே, நட்பையே இன்றளவும் சுமந்துக் கொண்டிருக்கிறாய். அவ்வாறாகவே நானும் இருக்க வேண்டுமென்பதே எனது லட்சியமும்!!

நீ இதை என்று, எப்பொழுது படிப்பாய் என எனக்கு தெரியாது. இருந்தாலும் என்னால் உனக்கும் நம் நட்புக்கும் செய்ய முடிந்த சின்ன மரியாதையே இது!!

நன்றிகள் பல கண்ணனுக்கு,
நட்பிற்கு வீற்றிருக்கை யாதென கண்டு சொன்னவனுக்கு!!

Thursday, January 13, 2011

மறுபடியும்

Experience often repeated, truly bitter experience, had taught him long ago that with decent people, especially Moscow people-- always slow to move and irresolute--every intimacy, which at first so agreeably diversifies life and appears a light and charming adventure, inevitably grows into a regular problem of extreme intricacy, and in the long run the situation becomes unbearable. But at every fresh meeting with an interesting woman this experience seemed to slip out of his memory, and he was eager for life, and everything seemed simple and amusing.
[The Lady With The Dog, Anton Chekhov]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

எல்லா நாள் மாதிரியும் தான் அந்த நாளும் ஆரம்பிச்சது. இன்னும் எத்தனை வருஷம் இதே lab-ல குப்பை கொட்டறதுங்கிற கேள்வி மட்டும்
ஒவ்வொரு நாளும் புதுசா கேட்கிறமாதிரியே இருக்குது.
PCR-ம் எதிர்ப்பார்த்த results தரவில்லை. எங்க தப்பு நடந்ததுனு மூளையை கசக்கிப் பிழிஞ்சி காயப்போட்டும் எதுவும் பிடிபடலை.
தலைவலி தான் மிச்சம். சரி, ஒரு காபி குடிச்சா தேவலைனு தோணுச்சி. இந்த mundane routine-ல ஒரு break கிடைச்ச மாதிரியும் இருக்கும்.

Cafetaria போயி Vending machine-ல ஒரு coffee பிடிச்சிட்டு திரும்பி நடக்கும் போது எதிர்ல யாரோ வேகமா வர மாதிரி இருந்தது.
அடுத்த நிமிஷம் கையில கப் இல்லை. வேற என்ன, நீங்க நெனச்ச மாதிரி தான்.

Oh, I am very sorry.
 
ஒரு நொடி தாமதிக்காம,"I am Raghav”-னு சொன்னேன்.

(புன்னகைத்தவாறே) I am Ashwini. ரொம்ப sorry-ங்க. அவசரமா வந்ததுல நீங்க இருக்கறத கவனிக்காம இடிச்சிட்டேன்.

No problem , Would you mind joining me for a cup of coffee?


அப்பறம் என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்கணும்னா மேல சொன்ன incident-ஐ உங்க lab-ல இல்ல உங்க office-ல முயற்சி செஞ்சி பாருங்க. இல்ல அதெல்லாம் முடியாதுனு சொல்றவங்களுக்கு
ரத்தின சுருக்கமா - பல காபி வித் அஸ்வினி-கள், புன்னகைகள், messages, missed-calls, விசாரிப்புகள், miss you messages, shopping, சில சினிமாக்கள், கூட்டத்தில்

ஓரக்கண் பார்வைகள், கொஞ்சம் possessiveness, ஊடல்கள், கூடல்கள், suspicions, நிறைய கேள்விகள், ego, அப்பறம் EGO, அப்பறம் EGO....finally break-up..
 
 



சில மாதங்கள் கழித்து...

அதே இடம். தனியா உக்கார்ந்து coffee குடிச்சிட்டு இருந்தேன்.
யாரோ பக்கத்துல வர மாதிரி இருந்தது. திரும்பி பாத்தேன். Coffee mug-ஒட ஒரு பொண்ணு வந்துட்டு இருந்தா.

Hi, I am Nandini. B.Tech final year project-காக internship join பண்ணிருக்கேன்.

Hello, நான் Raghav. இங்க Ph.D பண்ணிட்டு இருக்கேன்.

இந்த environment ரொம்ப bore அடிக்குது. யாரும் சிரிச்சி கூட பேச மாட்டேங்கிறாங்க. Would you mind if I join you for coffee?

Wednesday, January 5, 2011

அதுவும் நட்பும்

முன்னெச்சரிக்கை: இது கவிதை அல்ல. ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்ட வார்த்தைகளாலான எண்ணங்களின் குவியல்.அல்லது டரியல் எனவும் வைத்துக்கொள்ளலாம். :)

என்னுடைய
புதிய நட்பை
உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்

அது
பொய் சொல்வதில்லை
போலியாய் சிரிப்பதில்லை
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவதில்லை

அது
முதுகுக்குப் பின்னால்
புகைவதில்லை
முகத்திற்கு முன்னாலேயே
தயக்கமின்றி
புகைகின்றது

அது
கசடைத்
தன்னுள்ளே கொண்டிருந்தாலும்
வெள்ளுடுத்தியிருப்பது
பலரையும்
பரிகசிப்பதாகவே படுகிறது

அது
விக்ரமன் படநாயகிகளைப் போல்
அறிவரை கூறுவதில்லை
விஜய் படநாயகிகளைப் போல்
சொல்வதை மட்டுமே செய்கிறது

அது
உதட்டோடு முத்தமிட்டாலும்
நுரையீரலின்
தரையிலே நடனமாடுகிறது
அடிவயிறுவரை சில்லிட வைக்கிறது

அது
ஆள்காட்டி விரலளவே இருந்தாலும்
ஆள் காட்டி விளையாடுவதில்லை

அதனுடனான
எனது நட்பை
முறித்துக்கொண்ட பின்னும்
அது
என்னையோ நட்பையோ
தூற்றுவதில்லை

அது
அதுவாக
இருப்பதனால் தான்
அதுவாகவே இருக்கிறது போல
அவனாகவோ அவளாகவோ
இருந்திருந்தால்
நிறம் தரம் மணம்
நிரந்தர குணம் இல்லையெனப்
புரிந்திட செய்திருக்கும்

சாத்தானின் பணிமனை

 என்னவோ தெரியல, திடீர்னு இந்த குட்டிக் கதை (குட்டிக் கதைனா நெஜமாவே குட்டிக் கதை தாங்க..கதைல மொத்தமே இரண்டு வார்த்தை தான்) ஞாபகம் வந்தது.
சுஜாதாவோட ‘கற்றதும் பெற்றதும்’-ல வந்த மாதிரி ஞாபகம்.

தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்                      
கதை:  ஐயோ சுட்டுடாதே !


சரி..வெட்டியா இருக்கோமே நாமளும் இந்த மாதிரி ஒரு இரண்டு வார்த்தை கதை யோசிக்கலாமேனு முயற்சி செஞ்சதோட  விளைவு தான் கீழ
நீங்க பாக்குற மொக்கை கதை..உன்ன யாரு இந்த விபரீத முயற்சி எல்லாம் பண்ண சொன்னதுனு நீங்க நெனக்கறது எனக்கு கேட்குது...இருந்தாலும் நாம எல்லாம் எப்போ சொன்ன பேச்சை கேட்டுருக்கோம்...

தலைப்பு: தனியே அமர்ந்திருக்கும் பெண்ணிடம் பேச விரும்புகிற கூச்ச சுபாவமுள்ளவனின் இரண்டகநிலை
கதை: பேசலாமா வேண்டாமா?!?!

எப்பூடி!!!
சரி சரி..போயி உருப்படற வேலைய பாருங்க..   :)