சென்ற வாரம் சனிக்கிழமை நாளிதழில் வந்த ஒரு செய்தி. வியாழன் அன்று காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரை செல்லும் ஆயிரக்கணக்கான குடும்பங்களைப் போன்றே இந்த குடும்பமும் சென்றது. குழந்தையோடு கடற்கரையில் காலாற நடைபோடும் குடும்பம். அம்மாவின் கைப்பிடித்து நடந்து செல்லும் குழந்தை. கைப்பேசி அழைப்பு வரவே, குழந்தையின் கையை விடுத்து, கைப்பேசியை எடுத்து உரையாடுகிறார் அம்மா. உரையாடல் முடிந்த பிறகுதான் உணர்கிறார் குழந்தையைத் தவறவிட்டு விட்டோமென்று. கைப்பேசியில் மும்முரமான அம்மா சற்று நேரம் குழந்தையை மறக்க, குழந்தையோ கூட்டத்தில் தன் அம்மாவைப் போலவே உடையணிந்த யாரோ ஒருவர் பின்னால் சென்று, அவர் தன் அம்மா இல்லையென்பதைக் கண்ட பிறகுதான் பெற்றோரை பிரிந்து வந்துவிட்டோமென்று உணரத் துவங்குகிறது. மறுப்பக்கம் குழந்தையைத் தவற விட்ட பெற்றோர் அங்கிருந்த காவலரிடம் நிலைமையைத் தெரிவித்து, எங்கு தேடியும் பயனிருக்கவில்லை.
மறுநாள் காலை அவர்களின் வீடு தேடிவந்து கடற்கரையில் தவறவிட்ட குழந்தையை ஒப்படைக்கிறார் ஒரு இளைஞர். கடற்கரையில் தனியாக அழுதுக் கொண்டிருந்த குழந்தையைக் கண்ட அவரும் சிறிது நேரம் குழந்தையின் பெற்றோரைத் தேடியிருக்கிறார். பயனிலாது போகவே குழந்தையிடம் விசாரித்திருக்கிறார். ஆனால் பயத்திலும் பதட்டத்திலும் இருந்த குழந்தை அழுது கொண்டே இருந்ததே தவிர எதுவும் பேசவில்லை. அதனால் அந்த இளைஞர் குழந்தையைத் தன் வீட்டிற்கு அழைத்து சென்று உணவருந்தச் செய்து உறங்க வைத்திருக்கிறார். காலையில் மீண்டும் குழந்தையிடம் விசாரித்த போது சற்று ஆசுவாசம் அடைந்த குழந்தை தெளிவாக முகவரியைக் கூற, உடனே குழந்தையை அழைத்துக் கொண்டு அம்முகவரிக்கு சென்று பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளார். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் குடும்பமும் உறவினர்களும் திளைத்திருக்க தன் கடமை முடிந்ததென நன்றியைக் கூட எதிர்ப்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி செல்கிறார் அந்த முஸ்லீம் இளைஞர். ”தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”
இந்த செய்தியைப் படித்த போது நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அலுவலக நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இரண்டு கார்களில் சென்றோம். நிகழ்ச்சி முடிந்து திரும்ப இரவு நெடுநேரம் ஆகிவிட்டது. திரும்பும் வழி அப்போது தான் புதிதாக போடப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலை. எங்களுடன் வந்த கார் ஒரு திருப்பத்தில் சற்று நிலைத்தடுமாறி ஒரு முழு வட்டம் அடித்து சாலைக்கு பக்கத்திலிருந்த தாழ்வான பகுதியில் நின்ற. நல்ல வேளையாக அப்பொழுது முன்னே பின்னே வேறு எந்த வாகனமும் வராததால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. காரின் ஒரு டயர் மிகவும் பழுதடைந்ததால் அவ்விடத்தை விட்டு நகர வைக்கக்கூட முடியவில்லை. ஸ்டெப்னியும் அந்த காரில் இல்லை. அந்த அகால வேளையில் எங்களுக்கு உதவிடவும் அந்த நெடுஞ்சாலையிலும் யாரும் இல்லை. அப்படியே ஓரிரண்டு மணி நேரம் போயிருக்கும். தொலைவினில் ஒரு வெளிச்சம். ஒரு கார் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. காரில் இருந்தவர்கள் எங்கள் நிலைமை புரிந்தவர்களாக, பழுதடைந்த டயரை கழற்றுவதற்கு உதவி செய்து, அருகிலிருந்த பெட்ரோல் பங்கில் டயரை சரிசெய்யவும் உதவினர். பழுதுநீக்கப்பட்ட டயரை எங்கள் கார் இருக்குமிடம் எடுத்துச் சென்று கொண்டிருந்த போதுதான் கவனித்தோம் எங்களுக்கு உதவிசெய்தவர்களின் கார் கிளம்பி சிறிது தூரம் சென்றுவிட்டதென்பதை. நன்றியைக் கூட எதிர்ப்பார்க்காமல்.
இன்றுவரை அவர்களின் முகம் ஞாபகம் இல்லை. ஆனால், அவர்களாக உதவ முன் வந்த போது, ஒரு முன்னெச்சரிக்கைக்காக குறித்து வைத்த அவர்களின் கார் பதிவெண் - KA07M 2202 - மட்டுமே மிச்சமுள்ளது என் அலைப்பேசியில் எண்களாகவும் என் மனதில் குற்றவுணர்ச்சியாகவும்.
கடவுளை எங்கும் காணலாம் - கண்களையும் மனதையும் திறந்து வைத்திருந்தால்...
No comments:
Post a Comment