மறக்க முடியாத நாள் அது. என் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நாளை எப்படி மறக்க முடியும். அது வரையில் எல்லாம் சரியாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் நந்தினி என் அம்மா அப்பாவை நேரில் சந்தித்து பேசவேண்டுமென்று கட்டாயப்படுத்திய போது என்னால் அதற்கு செவிமடுப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
அந்த நாளும் வந்தது. மேஜையின் ஒரு புறம் என் அம்மாவும் அப்பாவும். எதிரில் நந்தினி. அருகே நான். அந்த இடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் எங்களையே பார்ப்பது போன்றதொரு பிரமை எனக்கு.
நிற்க.
இந்த இடத்தில் நந்தினிக்கும் எனக்குமான உறவை, கடந்த காலத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
நந்தினிக்கு எப்பொழுதும் என் மீதே கண். வைத்த கண் வாங்காமல் நான் என்ன செய்கிறேன், எங்கு செல்கிறேனென என்னையே பின் தொடரும் நந்தினியின் கண்கள். அவள் என்னையே பார்க்க, நானோ அப்படியே மெய்மறந்து விடுவேன்.
நான் வேறு பெண்களிடம் பேசுவதைக் கண்டால் என்ன ஏது என்று துளைத்தெடுத்து, மீண்டும் அப்படி செய்யாதிருக்க, என்னிடம் சத்தியம் வாங்காத குறையாக சத்தம் போடுவாள். இதனாலேயே மற்ற பெண்களும் என்னைக் கண்டால் விலகிப் போவார்கள். சிலருக்கு என் மீது கோபம் கோபமாக வரும். வேறு சிலருக்கோ இதில் வருத்தம் - கண்ணீர் கூட சிந்துவார்கள்.
அதுவுமில்லாமல், நந்தினி எனக்கு வைத்த செல்லப்பெயர் 'ரவுடி'. பிரச்சனை என்னவென்றால் நந்தினி எப்பொழுது என்னை ரவுடி என்று செல்லமாக அழைக்கிறாளோ அன்று செத்தேன் என்று அர்த்தம். ஏதோ தப்பு, அதுவும் நந்தினி கண்ணில் படுமாறோ, அல்லது கேள்விப்படுமாறோ, செய்து வசமாக மாட்டிக் கொண்டிருப்பேன். அன்றைய தினம் என் காது ஜவ்வு கிழியும் வரை திட்டிக் கொண்டே இருப்பாள். செல்லமாக காதைத் திருகி, தலையில் கொட்டி, ரவுடி என்றழைத்து அவள் கோபத்தைத் தீர்த்துக் கொள்வாள். ஆனால் என்ன நடந்தாலும் எவ்வளவு முயன்றாலும் என்னால் நந்தினியை விட்டு விலக முடியவில்லை.
எப்பொழுதும் நான் அருகிலேயே இருக்க வேண்டுமென நினைப்பாள். நினைப்பது மட்டுமின்றி சில சமயம் கட்டளையிடக்கூட செய்வாள். எனக்கோ மற்றவர்கள் பார்த்தால் - என்னடா இவன் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இப்படி இருக்கிறானென - நினைப்பார்களோ என்று ஒரே லஜ்ஜையாக இருக்கும்.
அவள் எனக்கே எனக்காக தீட்டிய சொல்லோவியங்கள் என் டைரியில் யாருக்கும் தெரியாமல் அந்தரங்கமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவள் நினைவு வரும் போதெல்லாம் நான் டைரி எடுத்து அவள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போலவே இருக்கும். இரவெல்லாம் உறக்கம் கொள்ளாமல் மறுநாள் அவளிடம் என்ன சொல்லுவது, அதற்கு அவள் என்ன சொல்லுவாளோ என்று நெடுநேரம் யோசித்துக் கொண்டிருப்பேன்.
அவள் நிறைய தடவை என் அம்மா அப்பாவிடம் பேச வேண்டும் என்று வற்புறுத்திய போதும் தட்டிக்கழித்தே வந்தேன். இந்த முறை என்ன சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. இப்பொழுது தோன்றுகிறது எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டோமென்று. அது இப்படி பேரிடியாக என் தலையில் விழும் என்று தெரிந்தே அந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது இப்போது தான் உறைக்கிறது.
மேஜையின் ஒரு புறம் என் அம்மாவும் அப்பாவும். எதிரில் நந்தினி. அருகே நான். அந்த இடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் எங்களையே பார்ப்பது போன்றதொரு பிரமை எனக்கு.
நந்தினி பேசப் பேச என்னுடைய அம்மா அப்பா என்னையே முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானோ என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழிக்கிறேன்.
நந்தினி என் அப்பாவைப் பார்த்து - "இதப் பாருங்க சார்..நான் உங்க பையன் கிட்ட எவ்வளவோ தடவ எடுத்து சொல்லிட்டேன்..இப்படியே இருந்தா சரிப்பட்டு வராதுன்னு..ஆனா அவன் என் பேச்சை கேட்க மாதிரியே தெரியல..ஒழுங்கா ஹோம் வொர்க் செய்யறது கெடயாது..செஞ்சாலும் தப்பு தப்பா செஞ்சிட்டு வரது..க்ளாஸ்ல எப்போ பார்த்தாலும் ஏதாவது சேட்டை செஞ்சிட்டே இருக்கான்..பேசிக்கிட்டே இருக்கான்..திட்டித் திட்டி என் தொண்டை தான் வலிக்குது..இவனையே கவனிச்சிட்டிருந்தா மத்த பசங்களை எப்போ பாத்துக்கறது நீங்களே சொல்லுங்க..இத்தனைக்கும் இவனை டேபிள் பக்கத்துலயே உக்கார வெச்சி சொல்லிக் குடுத்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்ல..அப்ப கூட தூங்கித் தூங்கி விழுறான்..எப்போ பார்த்தாலும் யார்கூடயாவது வம்பிழுத்துட்டே இருக்கான்..பொம்பளைப் புள்ளைங்க ஜடைய புடிச்சி இழுக்கறது..கன்னத்தை கிள்ளி வெக்கறதுனு இவன் ரவுடித்தனத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போயிட்டிருக்கு..அந்த பொண்ணுங்க பாவம் அழுதுட்டே என்கிட்ட வந்து நிக்கும்..காதைத் திருகி தலையில கொட்டுனாலும் அடுத்த நாள் மறுபடியும் அவங்க கிட்டயே வம்பிழுப்பான்..அதுவுமில்லாம இது வரைக்கும் எத்தனையோ தடவ உங்க அம்மா அப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வரச்சொல்லி சொல்லியிருக்கேன்..அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல..அப்பா வெளியூர் போயிருக்காரு அப்படி ஒவ்வொரு தடவயும் ஏதாவது சாக்கு போக்கு சொல்றான்..அவன் டைரிய நீங்க பாக்குறீங்களா இல்லையா..அதுல எத்தனை ரிமார்க்ஸ் இவனப் பத்தி எழுதி இருக்கேன்..அம்மா அப்பாவை நாளை ஸ்கூலுக்கு கூட்டிவரவும்னு எத்தனை தடவ எழுதியிருக்கேன்னு..க்ளாஸ் டீச்சர்-ங்கிற முறையில் சொல்றேன்..செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே இப்படி இருந்தா இன்னும் போகப் போக என்னென்ன பண்ணுவானோ.. கொஞ்சம் கண்டிச்சி வையுங்க..இனிமே பேரண்ட் டீச்சர் மீட்டிங் எல்லாம் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணுங்க..அப்படியே போகும்போது உங்க போன் நம்பரை ஆபிஸ் ரூம்-ல குடுத்துட்டு போயிடுங்க.."
எனக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது. அதுவரை நடந்தது கூட பரவாயில்லை. ஆனால் மறுநாள் முதல் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்ட குற்றவாளியைப் போல நடத்தப்பட்டது தான் முதல் அதிர்ச்சி. இங்கிலீஷ், தமிழ் முதற்கொண்டு எல்லா பாடத்துக்கும் டியுசன் வைத்து விளையாட்டுக்குறிய என் மாலைப்பொழுதுகளை எல்லாம் களவாடியது அடுத்த அதிர்ச்சி. வகுப்பில் யார் யாரோ செய்த சேட்டைகளுக்கெல்லாம் என்னையே பலிகடா ஆக்குவார்கள். எவ்வளவு மன்றாடினாலும் நம்பவே மாட்டார்கள். இதையெல்லாம் விட பேரதிர்ச்சியாக, அநீதியின் உச்சமாக நான் கருதுவது அடுத்த ஆண்டே என்னை பாய்ஸ் ஸ்கூலில் சேர்த்து பனிரெண்டாம் வகுப்புவரை அதே ஸ்கூலில் படிக்க வைத்தது.
நீங்களே சொல்லுங்க பாஸ், ஏதோ செகண்ட் ஸ்டாண்டர்ட்-ல செஞ்ச சின்ன தப்புக்கு போயி இவ்ளோ பெரிய தண்டனையா?? இப்படி எல்லாருமா சேர்ந்து என்னோட இளமைக்காலத்தை வீணடிச்சிட்டாங்களே!!
[Image courtesy: All images taken from internet. If violation of copyright found, will be removed.]
No comments:
Post a Comment