Wednesday, September 12, 2012

இந்திரன் வந்ததும், சந்திரன் வந்ததும்..


“When we are children we seldom think of the future. This innocence leaves us free to enjoy ourselves as few adults can. The day we fret about the future is the day we leave our childhood behind.” 
                                   ― Patrick RothfussThe Name of the Wind



அப்பொழுது நான் மூன்றாவதோ நான்காவதோ படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். ஐந்தாவதாகக் கூட இருக்கலாம். எங்கள் பள்ளிக்கு பக்கத்து கட்டடம் ஒரு கல்யாண மண்டபம். கல்யாணம் நடக்காத நாட்களில் கூட சில சமயம் ஒலிப்பெருக்கி ஓவர்டைம் செய்யும். ஒரு நாள் இதனால் கடுப்பாகிப் போன ஆசிரியை என்னையும் இன்னொரு மாணவனையும் - யாரென்று நினைவில்லை - மண்டபத்திற்கு அனுப்பி வைத்தார். சத்தத்தைக் குறைக்கச் சொல்லி சொல்வதற்காக.

ஏதோ மிகப் பெரிய பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப் பட்டது போல தைரியமாக பெருமைபொங்க கிளம்பினோம்.  மண்டபத்தை நெருங்க நெருங்க கொஞ்சம் கொஞ்சமாக அட்ரினலின் சுரக்கவும் இதயத்துடிப்பு எகிறவும் செய்தது. சிறுவர்கள் நாம் போய் சொன்னால் கேட்பார்களா? போங்கடா உங்க வேலையைப் பார்த்து என்று சொல்லிவிட்டால் அவமானமாக போய்விடுமே! அப்புறம் Girls side ஏளனமாக வேறு பேச செய்வார்களே!(ஏற்கனவே நமக்கும் அவங்களுக்கும் lunch period duster தகராறு வேற ) இப்படி பலவிதமான எண்ணங்களோடு மண்டபத்தினுள் நுழைந்தோம். பந்தல் அருகில் ஒருவர் சீரியல் லைட்டை சுற்றிக் கொண்டு இருந்தார். சற்று தொலைவில் இரண்டு/மூன்று வாட்டசாட்டமான ஆட்கள் அமர்ந்திருந்தனர்.சீரியல் லைட்டை சுற்றிக் கொண்டிருந்தவர் நாங்கள் வருவதைக் கவனித்து என்ன என்பது போல  பார்த்தார். திரும்பி பார்த்தால் பத்து அடி பின்னாலேயே நின்று விட்ட உடன் வந்த நண்பன். எனக்கோ எதற்காக வந்தோமென்பதே மறந்து போனது போல் ஆயிற்று. பதற்றத்தில் என்னவோ சொல்லிவிட்டு, பதிலுக்குக் கூட காத்திருக்காமல் திரும்பி விறுவிறுவென்று பள்ளி நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

திரும்பி வருவதைப் பார்த்த நண்பன் நான் அருகில் வந்த உடன் - என்னடா சொல்லிட்டியா? என்ன சொன்னாரு? - என்று என்னவோ கேட்டான். இப்படி பாதில கழட்டி விட்டுட்டியேடா துரோகி என மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டு - உம்ம்..ஏதோ சொல்லிட்டேன்..வா ஸ்கூலுக்கு போலாம் - என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். மண்டபத்தின் வாயிலருகே சென்ற பிறகு திரும்பிப் பார்த்தேன். சீரியல் லைட் ஆசாமி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வையிலிருந்து சீக்கிரம் மறையவேண்டி இன்னும் வேகத்தைக் கூட்டினேன்.

வகுப்பறைக்குள் நுழையும் வரை நண்பனும் வேறு எதுவும் கேட்காமல் வந்தான். உள்ளே நுழைந்தவுடன் ஆசிரியை மற்ற மாணவர்களைப் பார்த்து எல்லோரும் இப்படித் தான் என்னை மாதிரி தைரியமாக இருக்க வேண்டுமென்று சொல்லிப் பாராட்டினார். கைத்தட்டல் வேறு. அப்பொழுதுதான் எனக்கு என்ன நடக்கின்றதென ஓரளவு விழிப்பு வந்தது போலிருந்தது. அது வரையிலும் வேறு எந்த சத்தமும் என் காதில் ஒலிக்கவேயில்லை. பக்கத்தில் இருந்த நண்பன் - பரவாயில்லையே..நீ
ரொம்ப தைரியமா சொல்லிட்டு வந்துட்டியே - என்றான்.

ஒலிப்பெருக்கி அணைக்கப்பட்டு பாட்டுச்சத்தம் நின்று போயிருந்ததை அப்பொழுதுதான் கவனித்தேன். மொத்த பாராட்டையும் தன்னடக்கத்துடன் ஏற்றுக் கொள்வதைப் போன்ற பாவனையாக மெலிதாக புன்னகைத்து விட்டு இருக்கையில் சென்று அமர்ந்தேன். வகுப்பறையில் உள்ள அனைவரும் என்னையே கவனிப்பது போன்றதொரு உணர்வு.

ஆனால் நானும் சீரியல் லைட் ஆசாமியும் மட்டுமே அறிந்த உண்மை - அண்ணா, இந்த பாட்டு எந்த படத்துல வருது? - என்று நான் கேட்டது.

இந்திரன் வந்ததும், சந்திரன் வந்ததும்..



Image source: http://newspaper.li/childhood-days/

2 comments:

Tamizhan said...

நல்லா இருக்கு பாஸ்...இன்னும் நிறைய எழுதுங்க..

Chandrasekar said...

:)
Awesome Venkat, oru kurum padam paatha maathiri erundhudhu

Post a Comment