இன்றைய தமிழ்த் திரைப்பாடல்களில் அர்த்தமே இருப்பதில்லை என்று அங்கலாய்ப்பவர்களின் ஆதங்கங்களைப் புரிந்துக்கொண்டு
மாபெரும் ஆராய்ச்சிக்கு பிறகு சங்க இலக்கியப் பாடல்களுக்கு நிகராக அகம் மற்றும் புறப்பொருள் பற்றிய செய்திகளை நமது
திரையிசைப் பாடல்களும் ஆவணப்படுத்துகின்றன என எடுத்துக்காட்டவே இந்த ஆராய்ச்சிப் பதிவு. இத்தகைய முயற்சி நம்
சூழலில் மிகவும் புதியதும் வித்தியாசமானதும் கூட. இந்த முயற்சி இது போன்ற மேலும் பல எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு
வித்திட்டால் அதுவே இப்பதிவின் வெற்றியும் நோக்கமும் ஆகும். முயற்சியாளர்களுக்கு வாழ்த்துகளுடன் பதிவிற்குள் -
ஆராய்ச்சிக்குள் - செல்வோம்.
அகம் 401
திணை : பாலைத்திணை
துறை : கடமையா காதலா என்ற தன் இருதலைகொள்ளி நிலையை, தன் பிரிவாற்றாமையை தலைமகன் தலைமகளுக்கு சொல்லியது
துறை விளக்கம் :
கடமையா காதலா எதைத் தேர்ந்தெடுப்பது என்ற தர்மசங்கடமான சூழ்நிலையில் தலைவன் தனக்கு ஏற்படும் உளப்போராட்டங்களை
தலைமகளிடம் எப்படி நாசூக்காகப் பாடல் பாடித் தெரிவிப்பது
தெளிவுரை:
தலைமகன் தன்னுடைய நீண்ட கால இலட்சியமான காவல் அதிகாரி ஆவதற்கான முயற்சியில் நகரத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்கிறான்.
ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. சில சமூக விரோதிகளுடனான எதிர்பாராத மோதலில் தன்னுடைய கனவு, இலட்சியம் எல்லாம் தகர்ந்து
போனதை நினைத்து மிகவும் வருத்தத்தில் இருக்கிறான். இந்த இக்கட்டான சமயத்தில் தன்னைத் தேடி வந்த தலைமகளைப் பார்த்த பொழுது தனக்கு
உண்டான எண்ணங்களை பாடலாகப் பாடுகிறான்.
கிராமத்தில் இருந்து தலைமகன் நகரம் வந்த காரணமே தன் இலட்சியமான காவல் அதிகாரி கனவை நனவாக்குவது தான். ஆனால், எதிர்பாராத
பிரச்னைகளால் தன் கனவை அடைய முடியாத சூழ்நிலையையும், தான் முன்மாதிரியாகக் கொண்ட தன் ஆதர்ஷ நாயகனான காவல் உயர் அதிகாரிக்கு
ஏற்பட்ட நிலையையும் எண்ணி அந்த விரோதிகளைப் பழித்தீர்க்க காத்திருக்கிறான். ஆனால் இதை விட்டுவிட்டு காதலின் பின்னால் செல்ல
மனம் எத்தனிப்பது அவன் உச்சி மண்டையில் சுர்ரென்று உறைக்கின்றது.
தன்னைத் தேடி வந்த தலைமகளை பார்க்கின்ற பொழுது, அவளோடு தான் கழித்த சுகமான பொழுதுகள் எல்லாம் அவனுக்கு நினைவுக்கு வருகின்றன.
அவளை முதன்முதலாய் பார்த்த கணம் முதல் அவள் தன் காதலை ஏற்றுக் கொண்டது வரை அவன் மனதில் நிழலாடியது. இதையனைத்தும்
நினைத்துப் பார்க்கையில் அவனுக்கு காதல் உணர்வுகள் தலைக்கேறி தலை கிர்ரென்று சுற்றுகின்றது.
தலைமகள் தன் அருகில் வந்தால் உடம்பிலுள்ள நாடி நரம்புகள் எல்லாம் காதல் முறுக்கேறுகிறது. அளவுக்கு அதிகமான ஹார்மோன் சுரப்பினால்
காம உணர்வுகள் எல்லை மீறி கட்டுப்பாடின்றி ஏற்படுகிறது. இதனால் உடம்பே விர்ரென்று விறைத்து நிற்கின்றது. இம்மாதிரியான சூழலில்
என்ன செய்வதென்றே தெரியாமல் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறான் தலைமகன்.
இறுதியில் காதலே வென்று கடமை, இலட்சியம் எல்லாம் டர்ரென்று கிழிந்து காற்றில் பறபறவென்று பறக்கிறதென தலைமகன் ஒப்புக்கொண்டு குத்தாட்டம் போடுகிறான்.
இவ்வாறு தலைமகனின் அகச்சிக்கல்களை அதிகப்படுத்தும் புறவயப் போராட்டங்களை எல்லாம் வெற்றி கொண்டு தலைமகளோடு குதித்து ஆடுகிறான்.
இன்றைய தமிழ்த்திரை கதாநாயகர்களின் அகச்சிக்கல்களைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும் அரிய பாடல்களுள் இதுவும் ஒன்று.
பாடல்:
என் உச்சி மண்டைல சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்ருங்குது
கிட்டே நீ வந்தாலே விர்ருங்குது
டர்ருங்குது
இது ஒரு மிக சீரியஸான பதிவு!!
Saturday, November 27, 2010
Friday, November 26, 2010
நானா?!
எனக்கு முன்னே
ஆயிரம் திரைகள்
அத்தனையும்
கிழித்தெறிந்தாலும்
முகமூடியோடே
உலகத்தோடு
உறவாடுகிறேன்
விடையறிந்த
வினாக்களையே
மீண்டும் மீண்டும்
கேட்கிறேன்
தண்ணீரைக்
கையில் வைத்துக்கொண்டே
தாகத்தோடு
அலைகிறேன்
நீ சொல்வது
உண்மையென தெரிந்தும்
ஏற்றுக்கொள்ள முடியாததால்
குற்றமென நிறுவிடவே முயல்கிறேன்
என் முதுகில்
(ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும்)
என் முகத்திலேயே(முகமூடியிலேயே)
அலங்கரிக்கப்பட்ட அழுக்குகள்
ஆயிரம் இருந்தாலும்
கனவுகளிலும்
என் முகம் தேடி
தொலைகிறேன்
கண்ணாடியில்
தெரிவதையே
என் முகம் என
தேற்றிக்கொள்கிறேன்
Photo courtesy: http://www.betterphoto.com/gallery/dynoGallDetail.asp?photoID=5695190&catID=23076&contestCatID=10&rowNumber=3&camID=
Tuesday, November 16, 2010
இரவுகள் தனியாக வருவதில்லை
சில சமயங்களில்
இனிமையைக் கொண்டு வருகின்றன
பல சமயங்களில்
தனிமையைக் கொண்டு வருகின்றன
சில சமயங்களில்
இசையைக் கொண்டு வருகின்றன
பல சமயங்களில்
இயலாமையைக் கொண்டு வருகின்றன
சில சமயங்களில்
நினைக்க மறப்பதைக் கொண்டு வருகின்றன
பல சமயங்களில்
மறக்க நினைப்பதைக் கொண்டு வருகின்றன
சில சமயங்களில்
பேரின்பத்தைக் கொண்டு வருகின்றன
பல சமயங்களில்
பேரலறலைக் கொண்டு வருகின்றன
பெரும்பாலும்
இரவுகள் தனியாக வருவதில்லை
இரவுகள்
கொடுங்கனவுகளின்
கூடாரங்களாகவே இருக்கின்றன
இரவுகள்
இயலாமையின் வேதனையைக்
கூட்டுபவையாகவே இருக்கின்றன
இரவுகள்
பகல்களின் வேஷத்தைக்
கேலி செய்பவையாகவே இருக்கின்றன
இரவுகள்
பகல்களின் சந்தோஷங்களைக்
கேள்விக்குட்படுத்துபவையாகவே இருக்கின்றன
இரவுகள்
பகல்களின் எதிரிகளாகவே இருக்கின்றன
ஆம்
இரவுகள் தனியாக வருவதில்லை தான்
ஆனால்
தூக்கத்தை மட்டும் கொண்டு வருவதே இல்லை
Monday, November 15, 2010
அவன் அமைதியாகவே இருந்தான்
அவன் அமைதியாகவே இருந்தான்
வார்த்தைகளின்
தேவை இல்லாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகளால்
தேவைகளை உணர்த்த முடியாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகள்
புரிந்துக்கொள்ளப் படாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகள்
தங்கள் அர்த்தங்களை இழந்த பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகள்
அவனுக்கு அன்னியமாகப் போன பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகளோடு
அவனுக்கு முரண்பாடு ஏற்பட்ட பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகளால்
தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகளால்
வார்த்தைகளை வெற்றிகொள்ள முடியாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகளோடு
வாக்குவாதம் ஏற்பட்ட பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகளால்
கண்ணீரைத் தெரிவிக்க முடியாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்
வார்த்தைகளால்
எதையும் முழுமையாக புரிய வைத்துவிட முடியாதென உணர்ந்த பிறகு
அவன் அமைதியாகவே இருந்தான்
Subscribe to:
Posts (Atom)